Wednesday, December 23, 2015

ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்

ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும் 

Articleரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது (வாஜிபாகும்) கட்டாயமாகும்
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். யார் தன் பிள்ளை பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24)
தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும் பிள்ளைகளைவிடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி
(ஒருநாள்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களையும் விட உங்களை நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக ஆகும் வரை நீர் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு
உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள் எனக் கூறினார்கள். அதற்கு
நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் நீங்கள் உண்மையான முஃமீன் எனக்கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி
இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்) அவர்களை உண்மையான முறையில் நேசிப்பது வாஜிபாகும் (கட்டாயமாகும்).
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அல்லாஹ்வும் இன்னும் அவனின் தூதர் நபி(ஸல்) அவர்களும் ஏவியவைகளை எடுத்தும் தடுத்தவைகளை தடுத்தும் நடப்பதுதான் உண்மையான நேசமாகும். இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்
(நபியே!) நீர் கூறும், ”நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:31)
யார் என்னுடைய இயற்கை பண்புகளை நேசிக்கின்றாரோ அவர் என் வழியை பின்பற்றட்டும், திருமணமும் என் வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனன் ஸயீத் இப்னு மன்ஸுர், சுனனுல் குப்ரா லில் பைஹகி)
நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எப்படி நேசித்தார்கள்?
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை அடிதவறாமல் பின்பற்றினார்கள் என்று சொல்வதைவிட நபி(ஸல்) அவர்களின் அசைவுகளையும் பின்பற்றினார்கள் என்பதுதான் பொருத்தமாகும். அதைக் குறிப்பிடும் சில வரிகள்..
1. நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எப்படி நேசிக்கக்கூடியவர்களாக இருந்தீர்கள்? என அலி(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் எங்களின் பொருட்கள், பிள்ளைகள், தந்தை, தாய்மார்கள் மற்றும் தாகத்தின் போது குளிர் தண்ணீரை விடவும் எங்களிடம் மிகவும் நேசமுள்ளவர்களாக இருந்தார்கள் என விடை பகிர்ந்தார்கள்.
2. மக்கா முஷ்ரிக்கீன்களுக்கு அடிமையாக இருந்த ஜைத் இப்னு ததினா என்னும் நபித்தோழரை கொலை செய்வதற்காக மக்கா முஷ்ரிக்கீன்கள் ஹரத்தின் எல்லையை விட்டும் வெளியே எடுத்துச் சென்ற போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் (அப்போது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை) கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை உன் குடும்பத்தோடு வாழ விட்டுவிட்டு உன் இடத்தில் முஹம்மதை வைத்து அவரின் கழுத்து துண்டாடப்படுவதை நீ விரும்புவாயா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் என் குடும்பத்தோடு இருந்து நபி(ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே நோவினை தரும் ஒரு முள் குத்துவதைக்கூட நான் விரும்பமாட்டேன் எனக் கூறினார்கள். அப்போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் முஹம்மதை அவரின் தோழர்கள் நேசிப்பது போன்று மனிதர்களில் யாரும் யாரையும் நேசிப்பதாக நான் பார்க்கவில்லை என்று கூறினார்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி உஹது யுத்தத்தில் பரவிய போது நபித்தோழர்கள் திகைத்துப் போனார்கள். அப்போது ஒரு நபித்தோழி திகைத்துப் போன நிலையில் நபி(ஸல்) அவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக உஹதுப் போர்களத்திற்கு வந்தபோது தன்னுடைய மகன், தந்தை, கணவன் இன்னும் சகோதரர் ஷஹீதாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். அவர்களில் யாரை முதலில் பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது அந்த நபித்தோழி ஷஹீதாக்கப்பட்டவர்களை கடந்து செல்லும் போதெல்லாம் இவர் யார் என வினவிய போது இது உமது தந்தை, உமது சகோதரர், உமது கணவர், உமது மகன் என்று சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்கே? என்றுதான் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கொஞ்சம் முன்னால் நிற்கின்றார்கள் என நபித் தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்த அவர்கள் அன்னாரின் ஆடையின் ஓரத்தைப் பிடித்தவாறு, பின்பு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் அற்பணமாகட்டும், நீங்கள் நலமடைந்து விட்டால் நான் எந்த அழிவைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ஆதாரம்: தப்ராணி
மற்றொரு அறிவிப்பில்: உங்களின் நலத்திற்குப் பின் எல்லா கஷ்டங்களும் மிக இலேசானதே என்றார்கள். (ஷீறா இப்னு ஹிஷாம்)
நபித்தோழர்களும் நபித்தோழிகளும் உண்மையாகவே நபியவர்களை நேசித்தார்கள் என்பதற்கு இது போன்ற எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை கூறலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஏவியதையும் தடுத்ததையும் நபித்தோழர்கள் எடுத்தும் தடுத்தும் நடந்தார்கள் என்பது மட்டுமல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்காக தன் உயிரையே அற்பணித்தார்கள். நபியவர்களின் விருப்பத்தை தன் விருப்பமாக்கினார்கள். இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு, ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபியவர்கள் பேரில் மெளலிது படித்துவிட்டு அல்லது மீலாது விழா நடத்திவிட்டு நாம் நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து விட்டோம் என்பது போலி நேசமாகும். இன்னும் இவர்களில் அதிகமானவர்கள்,
நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திலிருந்து வெகு தூரமானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மெளலிது படிப்பதும் மீலாது விழா நடத்துவதும்
நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாக இருந்திருந்தால் அதை நிச்சயமாக நபித்தோழர்கள் செய்திருப்பார்கள். ஆனால் நபித்தோழர்களோ, தாபியீன்களோ, தப்உத்தாபியீன்களோ, சிறப்பிற்குரிய எந்த இமாம்களோ இதைச் செய்யவில்லை. அதாவது சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டிலும் இது நடைபெறவில்லை, இதை முதலில் அரங்கேற்றியவர்கள் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த பாதினிய்யா கூட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமியின்கள் என்பவர்கள்தான். இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்தில் நுழைய வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார்கள்.
ஃபாத்திமியீன்கள் யார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். இவர்கள் பாதினிய்யா (பல தவறான கொள்கைகளை உள்ளடக்கியவர்கள் என்பது இவ்வார்த்தையின் பொருளாகும்) என்னும் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையை கொண்டுள்ள யூத பரம்பரையைச் சேர்ந்த அப்துல்லா இப்னு மைமூன் அல் கத்தாஹ் என்பவனின் வம்சாவழியாவார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். இஸ்லாமியப் போர்வையிலே இஸ்லாத்தை அழிக்க முற்பட்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்துவிட்டு இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாமியப் பெயரில் இஸ்லாத்தினுள் நுழைத்தவர்கள். அலி(ரலி) அவர்களை இறைவனென்றும் அல்லது நபித்துவத்திற்கு தகுதியுள்ளவரென்றும் வாதிடக்கூடியவர்கள். நபித்தோழர்களை ஏசுபவர்கள். மறுமையை மறுப்பவர்கள், காபிர்கள், நெருப்பு வணங்கிகள். தவறான வம்சாவழியில் உள்ளவர்கள் என்ற பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். இவர்களைப் பற்றி சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கள் பின்வருமாறு.
இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மனிதர்களில் மிகக் கெட்டவர்களும் மிகவும் அல்லாஹ்வை நிராகரிப்பவருமாவார்கள். யாராவது இவர்கள் ஈமான் உள்ளவர்கள் என்றோ அல்லது இறையச்சம் உள்ளவர்கள் என்றோ அல்லது நல்ல வம்சாவழியில் உள்ளவர்கள் என்றோ கூறினால் அவர்கள் பற்றிய அறிவில்லாமல் அவர்களுக்கு சான்று கூறுவதேயாகும். அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)
அல் காழி அபூபக்ரில் பாகில்லானி(ரஹ்) அவர்கள் ‘இரகசியத்தை வெளிப்படுத்தி முகத்திரையை கிழிப்பது’ என்ற தனது பிரபல்லியமான புத்தகத்தில் கூறுகின்றார்கள்:
நெருப்பு வணங்கிகளின் வம்சா வழிகள், இவர்களின் கொள்கை யூத கிறிஸ்தவர்களின் கொள்கையைவிட மிக மோசமானது. அலி(ரலி) அவர்களை கடவுளென்றும் அல்லது அவர்கள் தான் நபியென்றும் வாதிடுபவர்களைவிட மிகவும் கெட்டவர்கள்.
அல் காழி அபூ யஃலா(ரஹ்) அவர்கள் தனது ‘அல் முஃதமது’ என்னும் புத்தகத்தில குறிப்பிடுகின்றார்கள்.
‘மறுமையை மறுப்பவர்கள், இறைநிராகரிப்பாளர்கள்’
இன்னும் பல இஸ்லாமிய அறிஞர்களும் இவர்கள் முனாஃபிக்குகள், மறுமையை மறுப்பவர்கள் இஸ்லாத்தை வெளியில் காட்டிகொண்டு உள்ளே குஃப்ரை மறைத்து வைப்பவர்கள், இவர்கள் யூத மற்றும் நெருப்பு வணங்கிகளின் வம்சாவழியினர் என்ற ஒற்ற கருத்தை கொண்டுள்ளனர்.
இவர்கள், ஹிஜ்ரி 362 ரமளான் மாதம் பிறை 5ல் எகிப்தின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்கள்தான் நபி(ஸல்) அவர்கள் மீது பிறந்தநாள் (மீலாது) கொண்டாடுவதை முதலில் ஆரம்பித்தவர்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது மாத்திரம் இவர்கள் மீலாது விழாவை ஆரம்பிக்கவில்லை அவர்களின் குடும்பத்தாரான ஃபாத்திமா(ரலி), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) இன்னும் ரஜப் முதல் இரவு மற்றும் அம்மாதத்தின் நடு இரவை கொண்டாடுவது, அவ்வாறு ஷஃபான் முதல் மற்றும் நடுஇரவு இன்னும் இது போன்ற பல கொண்டாட்டங்களை இவ்வுலகிற்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார்கள் மீதும் மீலாது விழா நடத்தியது இஸ்லாத்தையோ நபி(ஸல்) அவர்களையோ நேசித்ததற்கல்ல! இஸ்லாமியப் போர்வையில் இஸ்லாத்தை அழிப்பதற்காகவும் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் உண்மையான அகீதாவை (கொள்கையை) விட்டும் தூரமாக்குவதற்குத்தான்.
மீலாது விழாக்களுக்காக பல இலட்சக்கணக்கான தொகையை உணவுக்காகவும் இனிப்பு பண்டங்களுக்காகவும் அன்பளிப்புகளுக்காகவும் அரசு பணத்தில் செலவு செய்து அன்றைய தினத்தை அரசு விடுமுறையாகவும் பிரகடனம் செய்தார்கள். இவ்வாறு செய்ததினால் அதிக மக்களின் உள்ளங்களிலே அவர்கள் பற்றிய நல்லெண்ணங்களை பெற்றுக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய ஆட்சியும் நீண்டது. அவர்களின் கொள்கையும் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவியது. இதற்காகவே இந்த மீலாது நாடகத்தை அவர்கள் அரங்கேற்றினார்கள்.
அவர்கள் எகிப்தின் ஆட்சியை கைபற்றிய போது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நெருப்பு வணங்கிகளுக்கு அவர்களின் அரச சபைகளிலும் அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் இடமளித்தார்கள். மந்திரிகளாகவும் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரான முஸ்லிம்களை கொடுமைப்படுத்தினார்கள். மேலும் அவர்களை தங்களின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அரசாங்க வேலை வாய்ப்பு பெறுவதற்கு அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொள்வதை நிபந்தனையாக்கினார்கள். இதனால் பல யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஷீஆ (ஷியா) கொள்கையை தங்களின் கொள்கையாக (மத்ஹபாக) ஏற்றுக் கொண்டார்கள். அரசாங்க தொழிலிலுள்ள அனைவரும் அவர்களின் கொள்கையை எற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். நீதிமன்றத்திலுள்ள நீதியரசர்களையும் அவர்களின் கொள்கைப்படியே தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்தார்கள்.
ஹிஜ்ரி 372ல் எகிப்தை ஆட்சி செய்த பாத்திமிய்யீன்களின் மன்னரான அபுல் மன்சூர் நஸார் இப்னுல் முஇஸ் இப்னுல் காயிம் இப்னுல் மஹ்தி அல் உமைதி என்பவர் ரமளான் மாதத்தில் தொழப்படும் தராவிஹ் தொழுகையை தடைசெய்தார். ஹிஜ்ரி 393ல் லுஹா தொழுத 13 பேரை மூன்று நாட்கள் சிறையிலடைத்து தண்டனையும் வழங்கினார். ஹிஜ்ரி 381ல் முஅத்தா இமாம் மாலிக் என்னும் ஹதீத் கிரந்தம் ஒருவரிடத்தில் இருந்த காரணத்தினால் அவரை ஊரைச்சுற்றவைத்து அவமானப்படுத்தி அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஹிஜ்ரி 395ல் எல்லாப் பள்ளிவாசல்களின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் பள்ளியின் கதவுகளிலும் இன்னும் மண்ணறைகளிலும் முன்னோர்களான நபித்தோழர்களையும் நல்லடியார்களையும் அவமதிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டும் பொறிக்கப்பட்டுமிருந்தது. அவர்களின் கடைசி மன்னரின் ஆட்சி காலம்வரை நபித்தோழர்களை அவர்களின் மிம்பர்களிலும் மேடைகளிலும் ஏசுவது அவர்களின் சின்னமாக காணப்பட்டது.
இத்தோடு அவர்களின் ஆணவத்தை அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் மன்னர்களில் ஒருவரான மன்சூர் இப்னு நஸார் என்னும் அல் ஹாகிம் என புனைப் பெயர் சூட்டப்பட்டவர் தன்னை கடவுள் நிலைக்கே கொண்டு வந்துவிட்டார். மிம்பரில் குத்பா பிரசங்கம் செய்யும் இமாம், இவருடைய பெயரை கூறிவிட்டால் இவரை கண்ணியப்படுத்துவதற்காக மக்கள் எல்லோரும் எழுந்து நின்று விடுவார்களாம். இவரின் பெயர் கூறப்பட்டால் இவருக்காக சுஜுது செய்யும்படி மிஸ்ர் நாட்டு மக்களுக்கு அவர் கட்டளையும் இட்டிருந்தார், அவ்வாறே அம்மக்களும் செய்தார்கள். எந்தளவுக்கென்றால் ஜும்ஆத் தொழுகைகூட தொழாதவர்கள், இவரின் பெயர் கேட்டு அவர்கள் கடைவீதிகளில் இருந்தால் கூட சுஜுதில் விழுந்து விடுவார்களாம்.
அவர்களின் ஆட்சி காலத்தில் மிம்பரிலும் வேறு மேடைகளிலும் நபித்தோழர்களை ஏசினார்கள், சபித்தார்கள். குறிப்பாக மூன்று கலீபாக்களையும் (அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) உத்மான்(ரலி)) விமர்சித்தார்கள், இம்மூவரும் அலி(ரலி) அவர்களின் பகைவர்கள் எனக் கூறினார்கள்.
ஆறாம் நூற்றாண்டின் கடைசி அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இர்பில் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் முளஃப்பர் அபூ ஸயீத் கோக்பூரி என்பவர் இவர்களுக்குப் பின் மக்கள் மத்தியில் இந்த மீலாது மேடையையும் மெளலிது ஷரீபையும்? மிக பிரபல்லியப்படுத்தினார்.
இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் ‘அல்பிதாயா வன்னிஹாயா’ என்னும் வரலாற்றுக் குறிப்பில் ‘அபூ ஸயீத் கோக்பூரியின்’ வரலாற்றைக்கூறும் போது
ரபீவுல் அவ்வல் மாதத்தில் மெளலிது ஓதி மாபெரும் மீலாதுவிழாக் கொண்டாடுவார். இவர் ஏற்பாடு செய்யும் மெளலிது விருந்துபசாரத்தில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளும் பத்தாயிரம் கோழிகளும் ஒரு இலட்சம் தயிர்க்கோப்பைகளும் முப்பது ஆயிரம் ஹல்வாத் தட்டுக்களும் ஏற்பாடு செய்வார் என்று, இவர் ஏற்பாடு செய்த சில மெளலிது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் கூறினார்கள். இன்னும் ளுஹர் நேரத்திலிருந்து ஃபஜ்ர் நேரம் வரை ஸுஃபியாக்கள் பாட்டுப்பாடுவதற்காக ஒலிபெருக்கிகளை ஏற்பாடு செய்து அவர்களுடன் சேர்ந்து இவரும் நடனமாடுவார்.
ஆதாரம்: அல்பிதாயா வன்னிஹாயா
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இதுதான் மீலாது விழாவின் லட்சணம்! இவர்கள்தான் மீலாது விழாவை உலகிற்கு இறக்குமதி செய்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறையா? நிச்சயமாக இல்லை. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதுதான் அவர்களைப் நேசிப்பதற்கு உண்மை அடையாளமாகும்.
மீலாது விழா கொண்டாடுபவர்கள் எடுத்து வைக்கும் சில சந்தேகங்களும் அதற்குரிய விடைகளும்
சந்தேகம் -1
மீலாது விழாக் கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாகும்.
விடை: நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதென்பது அவர்கள் ஏவியதை எடுத்தும், தடுத்ததை தவிர்த்தும் நடப்பதாகும். பித்அத்துக்களையும் பாவங்களையும் செய்வது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாகாது. மீலாது விழாக் கொண்டாடுவது அந்த பாவமான காரியத்தைச் சேர்ந்ததே. நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை அதிகம் கண்ணியப்படுத்தியவர்கள். அவர்கள் மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதை நபித்தோழர்கள் செய்திருப்பார்கள். நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எந்தளவு கண்ணியப்படுத்தினார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவுபடுத்துகின்றது.
உர்வா இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாசி மன்னர்களிடம் சென்றிருக்கின்றேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் நபி(ஸல்) அவர்களை நேசிப்பது போல் வேறு எந்த மன்னர்களையும் அவர்களின் தோழர்கள் நேசிப்பதாக நான் பார்க்கவில்லை. (ஹதீஸின் ஒரு பகுதி)
ஆதாரம்: புகாரி
இவ்வளவு கண்ணியம் காத்த நபித்தோழர்கள் ஒரு தடவைகூட மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதைச் நபித்தோழர்கள் செய்திருப்பார்கள்.
சந்தேகம் -2
பல நாடுகளில் அதிக மக்கள் செய்கின்றார்கள்.
விடை: நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்தான் ஆதாரமாகும். மக்கள் செய்யும் செயல்கள் ஆதாரமாக முடியாது, அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே. நபி(ஸல்) அவர்கள் எல்லா பித்அத்துக்களையும் தடுத்துள்ளார்கள். மீலாது மேடையும் அந்த வகையைச் சேர்ந்ததே. மனிதர்கள் செய்யும் செயல்கள் குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்குர்ஆன் 6:116)
சந்தேகம் – 3
மீலாது விழா கொண்டாடி நபி(ஸல்) அவர்களை நினைவு படுத்துகின்றோம்.
விடை: நபி(ஸல்) அவர்களை ஒவ்வொரு நாளும் ஒரு முஸ்லிம் நினைவுபடுத்தியாக வேண்டும். நாம் செய்யும் பர்லான சுன்னத்தான ஒவ்வொரு அமல்களும் இன்னும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நபி(ஸல்) அவர்களின் நினைவூட்டலே. நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறாமல் அதான் இகாமத் சொல்ல முடியுமா? உளு செய்த பின் ஷஹாதத்தைனியை மொழிகின்றோம் அதிலும் நபி(ஸல்) அவர்களின் பெயர் மொழியப்படுகின்றது நபி(ஸல்) அவர்களின் பெயர் கூறாமல் தொழத்தான் முடியுமா? இப்படி நபி(ஸல்) அவர்களின் நினைவில்லாமல் ஒரு முஸ்லிம் அவரின் ஒரு நாளென்ன ஒரு நொடிப் பொழுதையாவது கழிக்க முடியுமா? இப்படித்தான் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ வருடத்தில் ஒரு முறை ரபீவுல் அவ்வல் மாதம் மாத்திரம் நபி(ஸல்) அவர்களை நினைவு படுத்துகின்றார்கள்? அவர்கள், நினைவுபடுத்தும் முறையும்? இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட முறையே. இவர்கள் புதிதாக உண்டுபண்ணியிருக்கும் நினைவூட்டலை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தேவையற்றவர்கள். அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் கண்ணியத்தை உலகெங்கும் உயர்த்தி விட்டான்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
மேலும் நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்குர்ஆன் 94: 4)
சந்தேகம் – 4மீலாது விழா நடத்துவது பித்அத்துல் ஹஸனாவாகும் (நல்ல பித்அத்தாகும்)
விடை: நல்ல பித்அத், கெட்ட பித்அத் என்பது இஸ்லாத்தில் கிடையாது. மாறாக எல்லா பித்அத்துக்களும் கெட்டதே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘நிச்சயமாக எல்லா பித்அத்துக்களும் வழிகேடே. (அஹ்மத், திர்மிதி). நஸாயியின் அறிவிப்பில் ‘எல்லா வழிகேடுகளும் நரகத்திற்க்குக் கொண்டு செல்லும்’ என்று வந்துள்ளது. நபி(ஸல்) அவர்களே எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என்று கூறியிருக்கும் போது, சில பித்அத்துக்கள்தான் வழிகேடு என்று கூறுவது ஆதாரப்பூர்வமான ஹதீதுக்கு முற்றிலும் மாற்றமான கருத்தாகும். இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
எங்களின் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது’ ஆதாரம்: புகாரி
ஆகவே, இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை, புதிதாக ஆரம்பித்து செய்யும் எந்த செயலும், அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்னு ரஜப்(ரஹ்) அவர்கள் அர்பஈநன் நவவிய்யாவில் வரும் இந்த வார்த்தைக்கு விளக்கம் அளிக்கும் போது ‘இது நபி(ஸல்) அவர்களின் ஜவாமிஉல் கலிம் என்னும்’ மிக சுருக்க வார்த்தைகளில்’ ஒன்றாகும். எந்த செயலும் இந்த வார்த்தையிலிருந்து விதிவிலக்காக முடியாது எனக் குறிப்பிடுகின்றார்கள். உமர்(ரலி) அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழ வைத்தது, உத்மான்(ரலி) அவர்கள் குர்ஆனை ஒன்று சேர்த்தது, போன்றவைகளைக் கூறி நல்ல பித்அத்தும் இருக்கின்றதுதானே எனக்கூறுவோருக்கு அதில் எவ்வித ஆதாரமுமில்லை. காரணம் இவைகள் அனைத்திற்கும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் இருக்கின்றது. இந்த கலீபாக்கள் சில காலம் விடுபட்டிருந்ததை புதிப்பித்தார்களே தவிர இவர்கள் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவில்லை. விரிவைப் பயந்து நல்ல பித்அத் கெட்ட பித்அத்தைப்பற்றி இங்கு விரிவாக விளக்க முடியவில்லை.
சந்தேகம் – 5
அபூலஹப் மரணித்த பின் அவரை கனவில் காணப்பட்டது. அவரிடத்தில் உங்களின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது. நான் நரகத்தில் இருக்கின்றேன், நபி(ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை எனக்கு துவைபா அம்மையார் அவர்கள் நற்செய்தி கூறியதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பெண்மணி பாலூட்டியதாலும் அப்பெண்ணை நான் உரிமையிட்டிருந்தேன். அதனால் ஒவ்வொரு திங்கட் கிழமையும் என் விரல்களுக்கு மத்தியிலிருந்து விரல் நுனியளவு கொட்டும் நீரை நான் உறிஞ்சி குடிக்கின்றேன் என்றார். காஃபிரான, இறைவனால் சபிக்கப்பட்ட ஒருவர் நபி(ஸல்) அவர்கள் பிறந்ததை பற்றி சந்தோஷம் அடைந்ததால் அவருக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டதென்றால், உண்மையான ஒரு முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதால் அவருக்கு சுவர்க்கம் கிடைப்பது நிச்சயம்.
விடை:
1. இந்த ஹதீது முர்சல் என்னும் தரத்திலுள்ளதாகும்.
2. இது மர்பூஉ என்னும் தரத்தில் இருந்தாலும், இது கனவில் காணப்பட்ட ஒரு செய்தியே. கனவில் காணும் செய்திகளை ஆதாரமாக எடுக்க முடியாது.
3. நபி(ஸல்) அவர்களின் பிறப்பு பற்றி நற்செய்தி கூறியதால்தான் அபூலஹப் துவைபா அம்மையாரை உரிமையிட்டார் என்பது வரலாற்று குறிப்புகளுக்கு மாற்றமானது. அபூலஹப் துவைபா அம்மையாரை
நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த பின்புதான் உரிமையிட்டார் என்றே வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. இதுபற்றி இப்னு ஸஃது அவர்கள் ‘தபகாத்’ என்னும் வரலாற்று ஏட்டில் குறிப்பிடும் போது,
‘நபி(ஸல்) அவர்கள் துவைபா அம்மையாருடன் இரத்த உறவு பேணுவார்கள், கதீஜா(ரலி) அவர்களும் துவைபா அம்மையாரை கண்ணியப்படுத்துவார்கள், அந்த நேரத்தில் துவைபா அவர்கள் அடிமையாக இருந்தார்கள். துவைபா அம்மையாரை அபூலஹபிடமிருந்து விலைக்கு வாங்கி உரிமையிட
நபி(ஸல்) அவர்கள் கேட்ட போது அதை அபூலஹப் மறுத்துவிட்டார். நபி(ஸல்) மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பின்பே துவைபா அம்மையாரை அபூலஹப் உரிமையிட்டார். துவைபா அம்மையார் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுடன் இரத்த உறவு பேணுபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். துவைபா அம்மையார் அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு மரணித்தார்கள்.
ஆதாரம்: தபகாத் இப்னு ஸஃது
இஸ்தீஆப் என்னும் நூலில் அல் ஹாஃபில் இப்னு அப்துல்பர் அவர்கள் துவைபா அம்மையார் அவர்களின் உரிமையிடல் பற்றி கூறும் போது, ‘நபி(ஸல்) மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பின்பே துவைபா அம்மையாரை அபூலஹப் உரிமையிட்டார்.’
ஆதாரம்: அல் இஸ்தீஆப்
இவ்வாறே இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்களும் தனது ‘அல் வஃபா ஃபீ அஹ்வாலில் முஸ்தஃபா’ என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்
4. அபூ லஹப் நபி(ஸல்) அவர்கள் பிறந்ததை கேட்டு சந்தோஷமடைந்தார் என்ற செய்தியும், துவைபா அம்மையார் அவர்கள் அதை நற்செய்தி கூறினார்கள் என்பதும், இந்த நற்செய்தி கூறியதாலே அபூலஹப் துவைபா அம்மையாரை உரிமையிட்டார் என்கின்ற செய்தியும் ஆதாரமற்றதாகும். இந்த சம்பவம் சரி என்று கூறுபவர்களே இதற்குரிய ஆதாரத்தைக் கூறவேண்டும்.
இன்னும் இது போன்ற பல சந்தேகங்கள் இருக்கின்றன. விரிவைப்பயந்து முடிவுக்கு வருகின்றேன். எல்லாம் வல்ல ஏக இறைவன் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நேரான வழியைக் காட்டுவானாக!
நன்றி: “சுவனப்பாதை” மாதஇதழ்

http://www.islamkalvi.com/?p=42

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்தரிகை அலுவலகத்திற்குள் கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி ஆகிய சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள் (Cartoonist) உற்பட 12 பேர் கொல்லப்பட்டனர். நபி (ஸல்) அவர்களை கிண்டல் செய்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டதால் இப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.
தாக்குதல் நடாத்தியவர்கள் அல்ஜீரிய வம்சாவளிகளான இரு முஸ்லிம்களே என அறிக்கைகள் வெளிவந்தன. ‘அல்லாஹூ அக்பர்’ என்ற முழக்கத்துடன் நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாய் பிரசுரித்தமைக்காகவே இத்தாக்குதலை தொடுப்பதாக கூறிக்கொண்டே தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்குப் பிந்தைய முதல் பதிப்பில் நபி (ஸல்) அவர்களை சித்தரிக்கும் கேலிச் சித்திரம் இடம்பெற்ற அட்டைப் படத்துடன் பிரான்ஸின் பிரபல கார்டூன் பத்திரிகையான சார்லி ஹெப்டோ மீண்டும் வெளியானது.
இந்தப் பத்திரிகையின் சிறப்புப் பதிப்பு மற்ற மொழிகளிலும் அச்சிடப்படப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் சார்லி ஹெப்டோவின் முதல் பதிப்பை வெளியிட பிரான்ஸின் ‘விடுதலைப் பத்திரிகை’ இயக்கமும் உதவிபுரிந்துள்ளது.
சார்லி ஹெப்டோவின் அட்டைப் படத்தில் நபி (ஸல்) அவர்களை சித்தரித்து அவரது கையில் ‘Je suis Charlie’ (நான்தான் சார்லி) என்ற வாசகம் கொண்ட பதாகை இருக்கும்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கேலிச் சித்திரத்தின் தலைப்பில் ‘Tout est Pardonne’ (எல்லாம் மன்னித்தாகவிட்டது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகையின் சட்ட நிபுணர் ரிச்சர்ட் மால்கா கூறும்போது, “சார்லி ஹெப்டோவில் இன்று நபி (ஸல்) அவர்களின் கருத்துச் சித்திரம் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. இது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்” என்றார்.
பாரீஸ் நகரில் 3 நாட்களாக துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நபி (ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
1960ல் பெர்னியர் மற்றும் ப்ரன்கோஸ் ஆகியோரோல் ஆரம்பிக்கப்பட்ட மாதாந்த பத்திரிகையான ஹரா கிரி பத்திரிகை 1961லும் 1966லும் இரு முறை சிறிது காலம் தடை செய்யப்பட்டது. 1969ல் ஹர கிரி ஹெப்டோ எனும் பெயரில் வாராந்த பத்திரிகையாக புதிதாக வெளிவந்தது.
1970ல் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்லஸ் டீ கல்லே இறந்ததை கிண்டல் செய்ததை தொடர்ந்து அப்பத்திரிகை தடை செய்யப்பட்டது. தடையிலிருந்து தப்பிக்கும் முகமாக சார்லீ ஹெப்டோ என பெயர் மாற்றம் செய்து மீண்டும் வெளியானது. காமிக்ஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சார்லி ப்ரெளனை அடிப்படையாக கொண்டே இப்பெயர் சூட்டப்பட்டது.
‘ஷார்ளி ஹெப்டோ’ எனும் இப்பத்திரிகை மத சர்ச்சையைத் தூண்டும் கேலிச் சித்திர அட்டைகளுக்கு பிரபல்யம் வாய்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மையே! எல்லாவற்றுக்கும் மேலாக அதன் உதயமே பிறரைக் கிண்டல் செய்வதில்தான் பிரசவமாகியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.
கண்டனத்திற்குரிய சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய முக்கியமாக நபி (ஸல்) அவர்களை கிண்டலாக சித்தரித்து உலக முஸ்லிம்களின் உணர்வுகளோடு சீன்டிப்பார்க்க எத்தனிக்கும் பத்திரிகை என்பது யாவரும் அறிந்ததே!
2006 பெப்ரவரி-9 அன்று அடிப்படைவாதிகளால் ஆட்கொள்ளப்பட்ட முஹம்மது என்று தலைப்பிட்டு வந்த இதழில் டென்மார்க் பத்திரிகையில் வெளிவந்த சர்ச்சைக்குரிய 12 கார்டூன்களை மறுபதிப்பு செய்ததோடு வேறு சில கார்டூன்களையும் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வரைந்தது.
வழக்கமாக 1 இலட்சம் பிரதிகள் விற்கும் சார்லி ஹெப்டோ நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி கார்டூன் வரைந்த காரணத்தால் 3 இலட்சத்துக்கும் மேல் விற்பனையானது. அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜாக்கூஸ் சிராக் மத உணர்வுகளை புண்படுத்தும் இப்போக்கை கடுமையாக கண்டித்தார். மேலும் உலகெங்கும் உள்ள பல்வேறு இஸ்லாமிய குழுக்களும் இப்போக்கை கண்டித்தன.
இக்கார்டூன்களை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இப்பத்திரிகைக்கு ஆதரவாக பிரான்ஸ் பின்னால் அதிபர்களான நிக்கோலஸ் சர்கோசியும் பிரான்கோஸ் ஹாலந்தேவும் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் நீதிமன்றத்தில் படித்தும் காட்டப்பட்டது விசித்திரமானது. 2007லும் இப்பத்திரிகை இறுதி தூதரை குண்டை கட்டியவராக நிறவெறியை அப்பட்டமாக பிரதிபலிக்கும் கார்டூனையும் வெளியிட்டது.
2011 நவம்பர் 3ல் நபி (ஸல்) அவர்களை சிறப்பு ஆசிரியர் என குறிப்பிட்டு வெளி வந்த இதழில் சிரிக்காமல் இறந்தால் சவுக்கால் 100 அடிகள் கொடுக்கப்படும் என இறை தூதர் சொன்னதாக அப்பத்திரிகை நையாண்டி செய்திருந்தது. அச்சூழலில் சார்லி ஹெப்டோவின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டதோடு அலுவலகம் மீதும் கைக் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது.
2012 செப்டம்பரில் மீண்டும் சார்லி ஹெப்டோ பத்திரிகை உலக மக்களுக்கு அருளாக வந்த உத்தம தூதர் நிர்வாணமாக இருப்பதை போன்ற கார்டூன்களை பிரசுரித்து முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது innocent of muslims படம் வெளியாகி பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நபி (ஸல்) அவர்களை குறிவைத்து இத்தனை முன்னெடுப்புகளை இப்பத்திரிகை ஏன் எடுக்க வேண்டும்? என்ற வினா இந்த இடத்திலே எழுவது தவிர்க்க முடியாதது.
இன்று இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக மனித உள்ளங்களை வசீகரித்து வரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும் விரோதப் போக்காளர்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.
இதன் விளைவாக கிறிஸ்தவப் பாதிரிகளும் மேற்குலகின் சில அறிஞர்களும் (?) இஸ்லாம் குறித்து போலியான கருத்தியல்களை முன்வைப்பதோடு முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் Islamophobia எனப்படும் கருத்தியல் மேற்குலகால் கட்டமைக்கப்பட்டுள்ளது
மேற்குலகில் பரவிவருகின்ற அல்லது கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமியப் பீதியின் பரிபாஷைக் கருத்தாகவே இது காணப்படுகின்றது. Islamophobia என்ற சொல் பீதி அச்சம் நோய் பயம் போன்ற கருத்துக்களைக் கொண்ட ஒரு கிரேக்க சொல்லாகும். 2011/09/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் மேற்குலகில் உருப்பெற்ற கருத்தியலாகவும் இதனை அடையாளப்படுத்தலாம்.
கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வருடத்திற்கு 4000 நபர்கள் இஸ்லாத்தை தழுவிக்கொள்கின்றனர். பிரித்தானியாவில் வருடத்திற்கு 5200 நபர்கள் இஸ்லாத்தை அரவணைக்கின்றனர்.
இந்நாடுகளின் இரண்டாவது பெரும்பான்மை மதமாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது. இஸ்லாத்தின் அபரிவிதமான இவ்வளர்ச்சியை சகிக்க முடியாமல், அதை தடுத்து நிறுத்த வேண்டுமானால் அதன் போதகர் இறைதூதர் (ஸல்) அவர்களை களங்கப்படுத்த வேண்டும். அவர்கள் மீது சேறு பூச வேண்டும். அவர்களது கொள்கைகள் பயங்கரமானவை என்ற மனப்பதிவை விதைத்தாக வேண்டும். இதற்காக இவர்கள் தேர்வு செய்த வழிமுறைகளில் ஒன்று தான் ‘கேலிச்சித்திர நையாண்டி’.
என்ன தான் கேலிச்சித்திரம் வரைந்து இழுக்கை ஏற்படுத்த முனைந்தாலும் இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பியர்களை இவர்களால் தக்க வைக்க இயலவில்லை. இதை தடுப்பதற்காக எடுத்த அடுத்த எத்தனம் தான் தீவிரவாத தாக்குதல் நாடகம் நடைபெற்றுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்துவிட்டால் இஸ்லாத்தை நோக்கி வருவோரை தடுக்கலாம் என்று இவர்கள் தப்புக் கணக்குப் போட்டுள்ளனர்.
எதிர்காலம் இஸ்லாத்திற்கே!
இஸ்லாத்தை அழிப்பதற்கு அதன் எதிரிகள் என்னதான் முயற்சித்தாலும் அதன் வளர்ச்சியையும் எழுச்சியையும் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. இது ஏக இறைவனின் வாக்காகவும் உள்ளது. மோசி ஸாபிச் என்ற ராஞ தந்திரி தனது Europe and Islam எனும் நூலில் growing cresent and decline of civilization (வளரும் பிறையும் நாகரிகத்தின் வீழ்ச்சியும்) எனும் தலைப்பின் கீழ் கூறும் பொழுது 21ம் நுற்றாண்டின் அரை இறுதிப் பகுதிக்குள் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியம் உள்ளது என்கிறார்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சி அலைகளினால் மேற்குலகடமும் ஐரோப்பியாவும் நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குறித்த பிழையான கருத்துக்களை அவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் மேற்குலக மற்றும் ஐரோப்பிய மக்கள் இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதான் இன்றைய அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் நிலை. மேற்கத்தேயவாதிகள் ஏற்படுத்திவிட்ட இஸ்லாம் பற்றிய பீதி அங்குள்ள மக்களை இஸ்லாம் பற்றி தேடவும் அறியவும் வழி சமைத்துள்ளது.
‘அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் (அவர்களுக்கு எதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன்.’ (08-30)
http://www.islamkalvi.com/?p=99778

நபிதினம் நபிவழியா?



நபிதினம் நபிவழியா?

24-01-2013 வியாழன் பூஷகிர் மஸ்ஜிதில் (பஹ்ரைன்) நடைபெற்ற நபி தினம் நபி வழியா? என்ற தலைப்பில் மவ்லவி.மன்சூர் மதனி அவர்கள் ஆற்றிய உரை.
மீலாது விழா கொண்டாடுவது நபி வழியா? மீலாது விழா யாரால் உருவாக்கப்பட்டது? அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதன் இஸ்லாமிய சட்டம் என்ன? இது போன்ற விழாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்?
நபியை எவ்வாறு புகழ்வது? நபியை நேசிப்பதன் இலக்கணம் என்ன? நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள் என்ன? மவ்லிதுப் பாடல்கள் உண்மையிலேயே நபி நேசத்தின் வெளிப்பாடா? முதலான விசயங்களில் விளக்கமான மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள். குர்ஆன் சுன்னா ஆதாரத்துடன் கருத்துச் செறிவுகள் நிறைந்த சொற்பொழிவு. இதை அனைவரும் அவசியம் காண்பதுடன் இந்தச் செய்தியை முஸ்லிம் சமுதாயத்திடம் கொண்டுச் சேர்க்க வேண்டிக் கொள்கிறோம்.
மிக்க அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்.
https://youtu.be/ayqnhYyDtTQ



http://www.islamkalvi.com/?p=7920

கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்

கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்

– முஹம்மட் அர்ஷாத் arshathslm@gmil.com
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.
பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படிஇறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.

வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.
விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
  • கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
  • இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,
  • சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.
‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென், “பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –
சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.
இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
மத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.
தூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்- Washington Irving- எழுதிய -“The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas”- என்கின்ற சிறுகதை நூற்களும், அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.
சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும், சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.
எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.
பைபிளின் ஒளியில்..
லூக்கா அதிகாரம்: 02

  1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
  2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
  3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
  4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
  5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
  6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
  7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
  8. அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் எனும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
இப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனிஉறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.
இரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற ‘அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்’ என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.
பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயேவயல்வெளிகளில் தங்கி,மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.
எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.
இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.
மேலும் lord.activeboard.com எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.
அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.
இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.
எனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.
அதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.
முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.
எனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24)
எனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார் (லுக்.1:26-28).
ஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும், மரியாள் கர்ப்பவதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.
அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.
அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6 மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.
இயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)
எனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.
மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் ‘மகிழ்ச்சி திருவிழா’ -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.
இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19) கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)
மேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.
பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.
மாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.
திருக்குர்ஆன் ஒளியில்..
இயேசு கிறிஸ்த்து அவரை திருக்குர்ஆன் “ஈஸா” என்று அழைக்கின்றது. ‘அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.
இதோ இறைமறையின் வார்த்தைகள்…
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ”நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
24. ”கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. ”பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)
26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ”நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக.
திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.
எனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ்கொண்டாடப்படுகின்ற டிசம்பர் 25ம்நாள், என்பது பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.
இறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத, பைபிள் கூறாத ஓருவிடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா?
பைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.
‘எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’
துணை நின்றவை:
1.விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்கள்
2. இயேசு நாதர்- மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர்- கேப்டன் அமிருத்தீன்

http://www.islamkalvi.com/?p=6060