Tuesday, December 06, 2011

இஸ்லாத்தை ஏன் பினபற்ற வேண்டும்.......


உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!. என்ற கேள்வி பரவலாகவே எழுப்பப்படுகின்றது. 

சற்று ஆழமாக ஆரய்வோமானால் இஸ்லாமே உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றது. ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான்.

இப்பதிவில் இஸ்லாத்தின் குற்றவியல் தீர்வுகளை ஓரளவு முன்வைக்கின்றேன். இந்த ஆக்கம் டாக்டர் ஸாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.



இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:
எல்லா மதங்களும் நல்லதையே செய்ய வேண்டும் – நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது.
இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களைப் படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கமே இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


திருடுதல்

எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. என்றால் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்று பின்வருமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

அ. இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.
இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

ஆ. திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.
திருடினான் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:
'
திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.'
(
அல்-குர்ஆன் 5 : 38)
'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா?. இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம் என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்
சகோதரர்களே இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:
உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது. 
அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?.  கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.
இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான். 

திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே  திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். 
அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments: