நமது முன்னோர்களான
மதிப்பிற்குரிய இமாம்களை எல்லை மீறிப் புகழ்ந்து அவர்களைப் புனிதப்படுத்த
முயற்சிக்கும் பித்அத்வாதிகள் அந்த இமாம்களின் பெயரால் அவர்களே வெறுக்கக்கூடிய
மார்க்கத்திற்கு முரணான நச்சுக்கருத்துக்கள் பொதிந்த பல சம்பவங்களை தங்களது
உபந்நியாசங்களில் சொல்லியும் புத்தகங்களில் எழுதியும் உள்ளனர். தங்களது வழிகெட்ட
கொள்கைகளுக்கு குர்ஆனும் ஸுன்னாவும் இடமளிக்காததால் இமாம்களிடம்
தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது......
அதிலும் குறிப்பாக இமாம்
மாலிக் இப்னு தீனார் அவர்களின் பெயரால் பல பொய்யான சம்பவங்கள் சமூகத்தில் பரவிக்
காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை நாம் சற்று ஆராய்வோம். இது போன்ற சம்பவங்களில்
மார்க்கத்திற்கு நேரடியாகவே முரண்படும் பல விடயங்கள் இருந்தாலும், அவற்றின் அறிவிப்பாளர்
வரிசைகளை ஆராயும் போது அவற்றை ஏற்க முடியாதென்ற நிலை வந்து விடுவதால்
உள்ளடக்கத்தில் உள்ள முரண்பாடுகளை ஒவ்வொன்றாக விளக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே
கருதுகின்றேன்.
சம்பவத்தின் சுருக்கம் :
ஜஃபர் இப்னு ஸுலைமான்
என்பவருடன் இமாம் மாலிக் இப்னு தீனார் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது அழகான
ஒரு வாலிபர் தனக்காகக் கட்டப்படுகின்ற ஒரு மாளிகையை மேற்பார்வை செய்து
கொண்டிருந்தார். உலக மோகத்தில் இவர் மூழ்கிவிட்டாரே என்று கவலைப்பட்ட இமாமவர்கள்,
அக்கட்டடத்திற்கு செலவாகக்கூடிய ஒரு லட்சம் திர்ஹம்களையும் தனக்கு வழங்கினால் சுவனத்தில்
ஒரு மாளிகையைப் பெற்றுத்தருவதற்கு தாம் பொறுப்பேற்பதாக வாக்களிக்கிறார்.
சிறிது
அவகாசம் கேட்ட அவ்வாலிபர் மறுநாள் காலையில் அதற்கு சம்மதிக்கிறார். அதன்படி இமாம் மாலிக்
இப்னு தீனார் அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகையைப் பெற்றுத்தருவதாக தாம்
பொறுப்பேற்பதற்கான உறுதிப்பத்திரத்தை எழுதி அவரிடம் கையளித்ததோடு, தான் பெற்ற
அப்பணத்தை அன்று மாலையே தர்மம் செய்து விடுகிறார்.
இச்சம்பவம் நடந்து நாற்பது
நாள் கூட முடிவடையாத நிலையில், ஒரு நாள் ஸுப்ஹு தொழுது முடித்த இமாம் மாலிக் இப்னு
தீனார் அவ்வாலிபருக்கு தாம் கொடுத்த அதே பத்திரம் மிஹ்ராபில் விழுந்திருப்பதைக்
கண்டார். அதில் மையின்றி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
" இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து மாலிக் இப்னு தீனார் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து விடுதலை அளிக்கப்படுகிறது. நீர் அவ்வாலிபருக்காக பொறுப்பேற்றதை அவருக்கு பூரணமாக வழங்குவதோடு இன்னும் எழுபது மடங்கு அதிகப்படுத்திக் கொடுத்து விட்டோம்."
அவ்வாலிபரின் வீட்டுக்குச்
சென்ற போது அவர் இறந்து விட்டதை அறிந்தார். அவரைக் குளிப்பாட்டியவரிடம் விசாரித்தார்.
அவ்வாலிபர் தம்மிடம் ஒரு காகிதத்தைத் தந்து அதை கபனுக்குள் வைத்துவிடுமாறு
கூறினார் என்ற அவர் கூறிய போது இமாம் மாலிக்
இப்னு தீனார் தம் கையிலிருந்த அக்காகிதத்தைக் காட்டியபோது இதைத்தானே நான் கபனில்
வைத்தேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த
மற்றொரு வாலிபர் " நான் இரண்டு லட்சம் தருகிறேன். எனக்கும் ஒரு பத்திரம்
தாருங்கள் " என்று
கேட்டதற்கு " அது
நடந்து முடிந்த விடயம். இனி அது நடக்காது அல்லாஹ் தான் நாடியதை செய்வான் " என்று கூறி விடுகிறார்.
(இது سبقك بها عكاشة வை ஞாபகப்படுத்துகிறது.)
இச்சம்பவத்தை இமாம் இப்னு
குதாமா தனது ( அத்தவ்வாபீன் திருந்தியவர்கள் ) என்ற கிதாபில் அறிவிப்பாளர்
வரிசையுடன் பதிவுசெய்திருக்கிறார்.
இச்சம்பவத்தை ஜஃபர் இப்னு
ஸுலைமான் அறிவிக்கிறார்
அவரிடமிருந்து முறையே
அல்ஹஸன் இப்னு அபீமர்யம் அல்அஸ்கரீ
அல்அப்பாஸ் இப்னு முஹம்மத் அல்முதஹ்ஹரீ
யூஸுப் இப்னு அஹ்மத் அல் வாஇள்
இப்ராஹீம் இப்னு முஹம்மத் அல்
பகீஹ் அல் மாலிகீ
அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு
அப்தில்லாஹ் அல் பாகுவைஹீ
அலீ இப்னு அப்தில்லாஹ்
அபூபக்ர் அஸ்ஸூபி
அபுல் பரஜ்
இமாம் இப்னு குதாமா என அறிவிப்பாளர்
வரிசை தொடர்கிறது.
இனி ஒவ்வொருத்தராக ஆராய்வோம்.
( 1 ) ஜஃபர்
இப்னு ஸுலைமான் جعفر بن سليمان الضبعي
ஹிஜ்ரி 178 ரஜப் மாதம் மரணித்த,
ஷீயாக் கொள்கையுடைய, வணக்கவாளியான இவரை இமாம்களான யஹ்யா இப்னு மஈன், இப்னு ஸஅத்,
இப்னுல் மதீனீ, இப்னு ஹிப்பான், ஆகியோர் நம்பகமானவர் என கூறியுள்ளனர். யஹ்யப்னு
ஸஈத் பலவீனமானவரென்று கருதுகிறார். அவரது பிழையான ஷீயா கொள்கைக்காகத் தான் அவரை குறை
கூறப்பட்டுள்ளது. இவர் ஷீயாக்காரராக இருந்தாலும் தனது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கவில்லை
என்பதோடு, அபூபக்ர் மற்றும் உமர் (ரழி) அவர்களுடைய சிறப்பு பற்றிய ஹதீஸ்களையும்
அறிவித்திருக்கிறார். நம்பகமான ஒரு அறிவிப்பாளர் பித்அத்தான கொள்கையில் இருந்தும்
தனது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்காதவராக இருந்தால் அவரது அறிவிப்புகளை ஏற்றுக்
கொள்ளலாம் என்பதில் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் மாற்றுக் கருத்து இல்லை.
எனவே இமாம்
இப்னு அதீ கூறுவது போன்று இவர் அறிவிப்பவற்றை கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் (1)
இவர் முஸ்லிமுடைய அறிவிப்பாளர்களில் ஒருவராவார்.
( 2 ) அல்ஹஸன்
இப்னு அபீ மர்யம் அல் அஸ்கரீ
الحسن بن أبي
مريم العسكري
நான் ஆராய்ந்தமட்டில் ஜஃபர்
இப்னு ஸுலைமானிடமிருந்து அறிவிக்கக்கூடியவர்களில் இந்தப் பெயருள்ள ஒருவர்
இருப்பதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல அறிவிப்பாளர்களைப் பற்றி கூறப்படும் எந்தக்
கிதாபுகளிலும் இந்தப் பெயருள்ள ஒரு அறிவிப்பாளரை காணமுடியவில்லை.الله أعلم
இவரது அறிவிப்புகள் இமாம் இப்னு குதாமாவுடைய ( التوابين திருந்தியவர்கள் ) என்ற கிதாபிலும் இமாம் இப்னு அபித்துன்யாவுடைய (
هواتف الجنان ) என்ற கிதாபிலும் பதிவாகியுள்ளது. ஆனாலும் இமாம்
இப்னு அபித்துன்யாவுடைய ஆசிரியர்களுடைய பெயர் வரிசையிலும் இந்த ராவியுடைய பெயர்
இல்லை. எனவே இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.
( 3 ) அல்அப்பாஸ்
இப்னு முஹம்மத் அல் முதஹ்ஹரீ
العباس بن محمد
المطهري
இவரும் முன்னையவரைப் போன்றவர்
தான். இந்தப்
பெயருள்ள ஒரு அறிவிப்பாளரை, அறிவிப்பாளர்களைப் பற்றி கூறப்படும் எந்தக்
கிதாபுகளிலும் கண்டுகொள்ள முடியவில்லை. இமாம் இப்னு குதாமாவுடைய التوابين திருந்தியவர்கள் என்ற கிதாபில் இந்தச் சம்பவத்தில் மாத்திரமே
இவரது பெயர் கூறப்பட்டுள்ளது. அதுவும் ஒரேயொரு முறைதான். இவரும் யாரென்று
அறியப்படாதவர் ஆவார்.
( 4 ) யூஸுப் இப்னு அஹ்மத் அல்வாஇள்
يوسف بن أحمد
الواعظ
முன்னைய இருவரும் யாரென்று
அறியப்படாதவர்களாக இருப்பதால் இவரை துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.
என்றாலும் இமாம் இப்னு அஸாகிருடைய تاريخ دمشق இமாம் இப்னுல்
ஜவ்ஸிக்குரிய مثير
العزم الساكن إلى أشرف الأماكن போன்ற கிதாபுகளில் இதே راوي களைக் கொண்ட அறிவிப்பாளர் வரிசைகளிலும் , இமாம் பஃதாதியுடைய
تاريخ بغداد இமாம் இப்னுல்
ஜவ்ஸியுடைய المنتظم
في تاريخ الأمم والملوك இமாம் அபூநுஐமுடைய حلية الأولياء وطبقات الأصفياء போன்ற கிதாபுகளில் வேறு அறிவிப்பாளர் தொடர்களிலும் யூஸுப்
இப்னு அஹ்மத் என்பவர் அஹ்மத் இப்னு அபில்ஹவாரி என்பவரிடமிருந்து அறிவிக்கும்
ரிவாயத்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அஹ்மத் இப்னு
அபில்ஹவாரியிடமிருந்து அறிவிக்கும் யூஸுப் இப்னு அஹ்மத் குராஸானில் வசித்ததாக தான்
கருதுவதாகவும் அவர் ஹிஜ்ரி 245 இல் மரணித்த துன்னூன் அல்மிஸ்ரியுடன்
சேர்ந்திருந்ததாகவும் அவரிடமிருந்து இப்ராஹீம் இப்னு ஹம்மாத் அல்அப்ஹுரியும்
இன்னும் பலரும் அறிவித்துள்ளனர் என்றும் கதீப் அல் பக்தாதி குறிப்பிடுகிறார்.
அவர்
நம்பகமானவரா இல்லையா என்பது பற்றி கூறவில்லை. இவருடைய ஆசரியர்கள் வரிசையில் அஹ்மத் இப்னு அபில்ஹவாரியை மாத்திரமே
குறிப்பிட்டுள்ளார்.(2)
( 5 ) நான்
அனுமானிப்பது சரியாக இருந்தால் الله أعلم இவரிடமிருந்து அறிவித்திருக்கிறார் என்று
இமாம் அல்பக்தாதி கூறக்கூடிய இப்ராஹீம் இப்னு ஹம்மாத் அல்அப்ஹுரி என்பவர்
தான் இந்த அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய இப்ராஹீம் இப்னு முஹம்மத் அல் பகீஹ்
அல் மாலிகீயாக இருக்கலாம்.
ஏனென்றால் இவருடைய முழுப் பெயர் இப்ராஹீம் இப்னு
முஹம்மத் இப்னு இப்ராஹீம் இப்னு அபீஹம்மாத் அல்அப்ஹுரி அல் மாலிகீ என்பதாகும். 387
இல் மரணித்த இவர் மிகுந்த செல்வாக்குள்ளவராகவும் வணக்கவாளியாகவும் ஒரு பகீஹாகவும்
இருந்தார் என்று இமாம் தஹபீ குறிப்பிடுகிறார். (3) ஆனால் அவர் நம்பகமானவரா இல்லையா என்பது பற்றி
கூறவில்லை.
அத்தோடு இவருடைய ஆசிரியர் மற்றும் மாணவர் பட்டியலில் இந்த அறிவிப்பில்
வரக்கூடியவர்களின் பெயர்கள் இடம் பெறவுமில்லை.
( 6 ) அபூஅப்தில்லாஹ்
முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாகுவைஹீ أبو عبد الله محمد بن عبد الله بن عبيد
الله بن أحمد بن باكويه
சுருக்கமாக இப்னு பாகுவைஹீ என்றும்
அழைக்கப்படுகிறார். ஹிஜ்ரி 340 களில் பிறந்து ஹிஜ்ரி 428 இல் மரணித்த இவர்
ஸூபிகளின் ஷைகாகவும் அவர்களது சம்பவங்களையும் வரலாறுகளையும் அறிந்திருந்தார். இவர்
ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்திருந்தாலும் அவர் அறிவிப்பவற்றை நம்பகமானவர்கள் தவிர்த்திருந்ததோடு
நல்ல சம்பவங்கள் அவர் மூலம்
அறிவிக்கப்பட்டுள்ளன என்றும்
கூறுகிறார்கள்.
அவருடைய அறிவிப்புகளை ஆராய்ந்த
போது அவற்றை அவர் கேட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லையென்று அபூ ஸாலிஹ்
அல்முஅத்தின் என்பவர் கூறுகிறார்.(4)
இந்த அறிவிப்பிலும்
முன்னையவரிடம் கேட்டதற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை. இவர் அறிவிக்கும்
ஹதீஸ்கள் கூட இடையில் துண்டிக்கப்பட்டதாக அல்லது மிகவும் பலவீனமானவையாகத்தான்
இருக்கின்றன.
( 7 ) அலீ
இப்னு அப்தில்லாஹ் علي بن عبد الله بن حسن بن أبي صادق
இவரது முழுப் பெயர் அலீ இப்னு
அப்தில்லாஹ் இப்னு ஹஸன் இப்னு அபீஸாதிக் என்பதாகும். சுருக்கமாக அலீ இப்னு
அபீஸாதிக் என்றே அழைக்கப்படுகிறார். ஹிஜ்ரி 499 இல் மரணித்த இவர் இப்னு பாகுவைஹியிடமிருந்து
அறிவித்திருக்கிறார் என்று கூறும் இமாம் தஹபீ அவர் நம்பகமானவரா இல்லையா என்பது
பற்றி கூறவில்லை.(5)
(08) அபூபக்ர் அஸ்ஸூபி محمد
بن عبد الله بن أحمد بن حبيب أبو بكر العامريّ الصُّوفيّ الواعظ،
இவருடைய முழுப் பெயர் முஹம்மத்
இப்னு அப்தில்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு ஹபீப் அபூபக்ர் அஸ்ஸூபி என்பதாகும். ஹிஜ்ரி
469 இல் பிறந்து ஹிஜ்ரி 530 இல் மரணித்தார். அலீ இப்னு அபீஸாதிகிடம் இருந்து
அறிவித்திருப்பதோடு இவரிடமிருந்து அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸீ அறிவித்திருக்கிறார்
என்று கூறிய இமாம் தஹபீ இவர் நம்பகமானவரா
இல்லையா என்பது பற்றி கூறவில்லை.
ஹதீஸ் மற்றும் பிக்ஹ் பற்றிய அறிவு
அவருக்கிருந்ததாகவும் , மற்ற உபதேசிகளைப் போன்ற கடும் பிரயத்தனம் செய்யாமல்
ஸூபித்துவத்தின் படி உபதேசம் செய்வார். நான்
அவரிடம் அதிகம் தப்ஸீர் மற்றும் ஹதீஸ்களை படித்திருக்கிறேன் என்று இவரது மாணவர் இமாம் இப்னுல் ஜவ்ஸீ சொன்னதை
இமாம் தஹபீ பதிவு செய்திருக்கிறார்.(6) என்றாலும் இவருடைய இன்னொரு மாணவரான இமாம் இப்னு அஸாகிர் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் தொழுத முறை பற்றி இவர் அறிவிக்கும் ஹதீஸை حسن صحيح என்று கூறியிருக்கிறார்.(7)
அபுல் பரஜ்
أبو الفرج عبد الرحمن بن
أبي الحسن علي بن محمد بن علي بن عبيد الله بن عبد الله بن حمادى بن أحمد بن محمد
بن جعفر الجوزي
இவர் தான் இப்னுல் ஜவ்ஸீ என்ற பிரபலமான
இமாம். இவரது முழுப் பெயர் அப்துர்ரஹ்மான் இப்னு அலீ. இவரது எட்டாவது பாட்டனுக்கு
ஜஃபருக்கு ஜவ்ஸீ என்று சொல்லப்பட்டது. ஹிஜ்ரி 509 களில் பிறந்து 597 இல்
மரணித்தார்.
இமாம் தஹபீ இவரை الشيخ، الإمام، العلامة، الحافظ، المفسر، شيخ الإسلام، مفخر العراق، என்று வர்ணிக்கிறார். இமாம் இப்னு குதாமா தனது மாமாவின் மகன்
அப்துல்கனீ அல்மக்தஸியுடன் இவரிடம் சில நாட்கள் பக்தாதில் தங்கியிருந்தார்.
தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ்,
உலகப்பற்றின்மை, உபதேசம், வரலாறு மருத்துவம் போன்ற பல துறைகளிலும் பல கிதாபுகளை எழுதியுள்ளார்.
(8) இவரை விட பல
துறைகளிலும் அதிகமான கிதாபுகளை எழுதிய யாரும் இருப்பதாக தான் அறியவில்லையெனவும்
அவற்றையே பல ஏடுகளில் எழுதப்பட்டிருந்ததை தான் கண்டதாகவும் கதீப் அல் பக்தாதீ
கூறுகிறார். (9)
தான் எழுதிய கிதாபுகளை
மீள்பரிசீலனை செய்யாததால் அதிகமான தவறுகளை விட்டிருக்கிறார். ஹதீஸ்களை தரம்
பிரிப்பதில் ஏனைய முஹத்திஸ்களுக்கு இருந்த தேட்டம் அவரிடம் இருக்கவில்லை மாறாக الموضوعات இட்டுக்கட்டப்பட்டவை என்ற தனது
கிதாபில் பதிவு செய்தவற்றையும் வேறு கிதாபுகளில் ஆதாரமாக எடுத்திருக்கிறார். தனது
சிறிய கிதாபான مشيخة ابن الجوزي இல் கூட பல இடங்களில் தவறிழைத்துள்ளார்.
அவருடைய
பிழைகளை ஒவ்வொன்றாக அவருக்கு தெரியப்படுத்தினால் என்ன? என்று அபூ முஹம்மத் இப்னுல் அஹ்ழரிடம்
கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய பதில் : தவறுகள் கொஞ்சமாக இருந்தால் ஒவ்வொன்றாக சுட்டிக்
காட்டலாம் இவருடைய தவறுகள் அதிகம் இருக்கின்றனவே. என்பது தான்.(10)
இவர் நல்லவராக இருந்தாலும்
தான் பதிவு செய்தவற்றை மீள்பரிசீலனை செய்யவில்லை என்பதால் அவர் அறிவிப்பவற்றில் மிகக்
கவனமாகவே இருக்க வேண்டும்
இமாம் இப்னு குதாமா
ஹிஜ்ரி 541 இல் பிறந்து 620
இல் மரணித்த இவருடைய முழுப் பெயர் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் என்பதாகும். இவருடைய التوابين திருந்தியவர்கள் என்ற கிதாபு பற்றி இமாம் ஸகாவீ
கூறும் போது : இப்னு குதாமாவுடைய التوابين இல் அவர் இவற்றை பதிவு செய்யாதிருந்திருக்கலாம் என்று நான் கருதும் விடயங்கள்
இருக்கின்றன. குறிப்பாக அவற்றின் அறிவிப்பாளர் வரிசை சீரானதாக இல்லை. என்று
கூறுகிறார்.(11)
இவ்வாறு இடையில்
துண்டிக்கப்பட்டும் யாரென்று அறியப்படாதவர்களையும் கொண்டு பதிவு செய்யப்பட்ட இது
போன்ற சம்பவங்களை வைத்து இமாம்களை கொச்சைப்படுத்தவோ மக்களை நல்வழிப்படுத்த
முயற்சிக்கவோ வேண்டியதில்லை. குர்ஆனிலும் ஸுன்னாவிலும் மாத்திரம் நிறைவு காண்போம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்
துணை நின்றவை
1)
تهذيب الكمال بتحقيق د. بشار عواد معروف / سير
أعلام النبلاء / تاريخ الإسلام / تهذيب التهذيب
/ ميزان الاعتدال / لسان الميزان
2) تاريخ بغداد
3) تاريخ الإسلام / الإرشاد في معرفة علماء الحديث لأبي يعلى الخليلي
4) سير أعلام
النبلاء / تاريخ الإسلام / لسان الميزان / المنتخب من كتاب السياق لتاريخ نيسابور
5) تاريخ الإسلام
6) تاريخ الإسلام
7) معجم ابن عساكر
8) تاريخ الإسلام
/ سير أعلام النبلاء
9) تاريخ بغداد
وذيوله
10)
تاريخ الإسلام / سير
أعلام النبلاء
11)
الإعلان بالتوبيخ لمن
ذم التاريخ
ஆக்கம் : ஷுஐப் (உமரீ)
3 comments:
JazakallahU khaira
JazakallahU khaira
JazakallahU khaira
Post a Comment